கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை உப்பாற்றங்கரையில் மாசாணி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. நீதிக்கல்லால் இந்திய அளவில் அடையாளப்படுத்தப்படும் மிகவும் பிரசித்திப்பெற்ற திருத்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த தை அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய பூஜையான மயான பூஜை கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக கோயில் அருளாளி தலைமையில் உப்பாற்றங்கரையில் திரிசூலம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தும் குண்டம் திருவிழா ஆனைமலை வேட்டைக்காரன்புதூர் சாலையில் இன்று நடைபெற்றது.
முறைதாரர்கள் பங்கேற்க பூப்பந்தை உருட்டி, 40 அடி நீளமுள்ள குண்டத்தில் திரிசூல ஆபரணப் பெட்டியை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள், தங்களது உடலை வருத்தி பக்தி பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடித்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இறை வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா