கோவை:அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு குழுமம் சார்பில் ’மார்கழியில் மக்களிசை’ என்ற இசை நிகழ்ச்சி இன்று(19/12/2021) நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சிக்கு கடந்த வருடம் சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வருடம் மதுரை, கோவை, சென்னை பகுதிகளில் நடத்துகிறோம். நேற்று மதுரையில் நடைபெற்றது.
மக்களுக்கும், இசைக்கும் இடையே நல்ல தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இதுவரை மேடை ஏறாதக் கலைஞர்களை மேடை ஏற்ற இருக்கிறோம். பழங்குடியின மக்களின் இசைகளை நடத்தவுள்ளோம். இந்த நிகழ்ச்சி மூலம் கலைஞர்கள் பயன்பெறுகிறார்கள்.
மார்கழியில் மக்களிசை
‘மார்கழியில் மக்களிசை’ என்பது ஒதுக்கப்பட்ட இசை வடிவங்களை மீட்டெடுக்கும் முயற்சி. இன்னும் மார்கழியில் ஒரு குறிப்பிட்ட இசைகள் மட்டும் கோயில்களில் இசைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மார்கழியை இசைக்கான காலமாக பார்க்கும் போது ஒதுக்கப்பட்ட இசையையும் கலைஞர்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்வாக கொண்டு வந்துள்ளோம்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநில பாடலாக கொண்டு வந்தது நல்ல விஷயம் தான். சமூக நீதி குறித்த விழிப்புணர்வு கொண்ட படங்களை நாம் இயக்கி வருகிறோம். பாடல்கள் மூலம் எளிமையாக கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல முடிகிறது.
இசை சக்தி வாய்ந்த ஆயுதம்
சமூக நீதி பற்றி பேசும் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலை உடைத்தெறியப்பட்டுள்ளது. சமூக நீதி பற்றி பேசினால் தான் மக்களிடம் நெருங்கமுடியும் என்ற நிலை வந்து விட்டது. அதைப் பற்றி பாடக்கூடிய இசைவானி, முத்து, அறிவு , உள்ளிட்டோருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இசை சக்தி வாய்ந்த ஆயுதம், சமூக விடுதலைக்காக பயன்படுத்தி உள்ளோம். பாலியல் தொல்லை காரணமாக மாணவிகள் தற்கொலையை பார்க்கும் போது மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தவறவிட்டோம் என தோன்றுகிறது.
பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவது இல்லை. இதுபோன்ற செயல்களில் குழந்தைகளை குற்றவாளியாக மாற்றுகிறோம். அது தவறானது.
பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தெரிந்தவுடனே தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தயராக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:பாஜக ஒபிசி செயலாளர் கொலை - NIA விசாரிக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!