கோயம்புத்தூர்: கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை விமான நிலையத்திலிருந்து நேற்று (அக் 19) டெல்லிக்கு புறப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக ஆயுத பூஜை, விஜயதசமியை மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகின்றோம்.
தமிழர்களுடைய வாழ்க்கையில் ஆயுத பூஜை என்பது ஒரு மிக முக்கியமான பண்டிகை. அப்படிப்பட்ட ஆயுத பூஜைக்கு திமுக அரசின் ஆட்சியாளர்கள் அறிவித்திருக்கும் அறிக்கை, மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு தமிழர்களுடைய வழிபாட்டு உரிமையை புண்படுத்தும் விதமாக இது இருக்கிறது.
சனாதனம்: நேற்றைக்கு திருப்பூர் மருத்துவக் கல்லூரியிலிருந்து ஒரு அறிக்கை வெளி வந்துள்ளது. அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏனென்றால், மருத்துவமனைக்கு மக்கள் போவது அவர்கள் குணமாக வேண்டும், அதே நேரத்தில் கடவுளிடம் வேண்டுவதற்காகவும் செல்கின்றனர். பல மருத்துவமனைகளில் கோயில் உள்ளது.
தமிழக அமைச்சர் சனாதனத்தை ஒழிப்போம் என சொன்னதை நிறைவேற்றுவதற்காக, இந்து தெய்வங்களின் படங்களை வைத்து ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்ற அறிக்கை வந்துள்ளது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் திமுக ஆட்சிக்கும், முதல்வருக்கும், பட்டத்து இளவரசர்களுக்கும் சரியான நேரத்தில் சரியான பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள்.
நாமக்கலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க தீர்மானம் போடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. சுதந்திரத்துக்காக பாடுபட்ட ராமலிங்கம் பிள்ளையின் பெயர் வைப்பதுதான் சாலச் சிறந்ததாக இருக்கும். அதுவே நாமக்கல் மக்களின் விருப்பமாகவும் உள்ளது.
அதே நேரத்தில், சுதந்திரத்திற்காக பாடுபட்டு தன்னுடைய இன்னுயிர் ஈத்தவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக, 75வது அமிர்த பெருவிழாவில் எனும் இந்த சரியான நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பெயர் வைப்பதுதான் சிறந்ததாக இருக்கும்.
தமிழகம் முழுவதும் லியோ திரைப்படம் குறித்து பேசப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியாளர்கள் அவர்களை மிகவும் பாடாய்படுத்தி விட்டார்கள். ஒரு வழியாக இன்று படம் வெளி வந்துள்ளது. படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
கோவை குண்டுவெடிப்பு: கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு பரோல் வழங்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், “கோவையில் மிகப்பெரிய கொடூரமான சம்பவம் நடந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தது. சுமார் 70 பேருக்கு மேல் உயிர் தியாகம் செய்தனர். பல நூறு பேர் காயப்பட்டு, இன்றைக்கும் மாற்றுத்திறனாளிகளாக இருந்து வருகின்றனர்.
அவர்களுக்கு துரோகம் செய்யாமல் தமிழக அரசாங்கம் சட்டத்திற்கு உட்பட்டு என்ன தண்டனை கொடுத்திருக்கிறார்களோ, அந்த தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும். எனவே, தமிழக அரசாங்கம் ஓட்டு அரசியல் செய்வதை விட்டுவிட்டு தீவிரவாதிகளை தீவிரவாதிகளாகப் பார்க்க வேண்டும்.
ஜெய் ஸ்ரீ ராம் விவகாரம்: ஜெய் ஸ்ரீ ராம் என்கிற கோஷம் ஒரு வெற்றியின் அடையாளமாகும். வெற்றிவேல் வீரவேல் என பண்டைய காலத்து அரசர்கள் போரில் ஜெயித்ததும் எப்படி முழங்கினார்களோ, அதேபோல்தான் இது. இந்தியா முழுக்க மக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிடுகின்றனர். இது குறித்து நீங்கள் கேட்ட கேள்விக்கு ஜெய் ஸ்ரீ ராம் எனதான் கூறினேன். இப்போதும் அதையே கூறுகிறேன்.
நமது மக்களின் உணர்வாகவே இதை பார்க்க வேண்டும். அமைச்சர் உதயநிதி இதை அரசியலாக்க பார்த்தார், தோல்வி அடைந்துள்ளார். திமுகவினரின் ஆட்கள், அமைச்சர் அலுவலகத்திலும், அதிகாரிகளின் அலுவலகங்களிலும் சென்று அராஜகம் செய்கின்றனர். அரசாங்கத்தை இப்படித்தான் இயக்க வேண்டும் என அறிவாலயத்தின் கொள்கை பரப்புச் செயலாளர்கள்போல் அதிகாரிகள் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை தமிழக அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மீனவளத்துறையைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு 1,800 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். ஆனால் பிரதமரின் படத்தை போடுவதற்கு தயங்குகிறார்கள். அதேபோல், 300 கால்நடை ஆம்புலன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அது 100 சதவீதம் மத்திய அரசின் நிதி. அதில் மோடி படத்தை கட்டாயம் போட வேண்டும். இந்த ஒரே காரணத்திற்காக வண்டிகளை வாங்கி, எங்கேயோ ஒழித்து வைத்துள்ளனர்.
பாஜக கூட்டணி: பாஜகவின் அகில இந்திய தலைமை, கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கும். மகளிர் உரிமைத் தொகையைப் பொறுத்தவரை அனைவருக்கும் வழங்குவதாக கூறிவிட்டு, தற்போது திமுகவினருக்கு மட்டுமே வழங்கி வருகின்றனர். இது போன்று எல்லா துறைகளிலும் திமுகவினர் மட்டுமே பலன்களை அனுபவித்து வருகின்றனர்.
கரோனா நேரத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மத்திய அரசாங்கத்தின் உடைய PIB-இல் இருந்து வழங்கியுள்ளோம். PIB-இன் அக்ரடியேசன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில் பல வசதிகள் உள்ளது. அதேபோல் காப்பீடு உள்பட பல பலன்கள் மத்திய அரசு சார்பில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நவ.9ஆம் தேதி தமிழகத்தில் லாரிகள் ஓடாது: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு!