கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து சிறுமுகை செல்லும் சாலையில் மோத்தேபாளையம் கிராமத்தில் உள்ள தோட்டங்களில் இருந்த கன்றுக்குட்டிகள், நாய்களை சில மாதங்களாக சிறுத்தை ஒன்று இரவு நேரங்களில் கொன்றுவந்தது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து, இரவு நேரங்களில் வெளியேவர பயந்தனர். மேலும், இதனால் விவசாயத் தொழிலும் பாதிக்கப்பட்டது.
இதனால் அட்டகாசம் செய்துவரும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க கிராம மக்கள் சிறுமுகை வனத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்ததையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறிய தானியங்கி கேமராவைப் பொறுத்தினர். கேமராவில் பதிவான சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட தோட்டத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் நேற்று மாலை கூண்டை வைத்தனர். இரண்டாகப் பிரிக்கப்பட்ட கூண்டின் பின்புறம் ஆட்டை கட்டிவைத்து, கூண்டை செடி, கொடிகள், இலை தழைகளால் மூடி வைத்து வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை கூண்டருகே சென்று பார்த்தபோது உள்ளே இருந்து உறுமல் சத்தம் கேட்டது. கூண்டிற்குள் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தைக்குட்டி சிக்கி இருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன், வனத் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுத்தை சிக்கிய கூண்டை பத்திரமாக லாரியில் ஏற்றினர்.
பின்னர், பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதியில் சிறுத்தையை கூண்டிலிருந்து திறந்து விட்டனர். கூண்டைத் திறந்ததும் சிறுத்தை வனப்பகுதிக்குள் துள்ளிக்குதித்து பாய்ந்தோடி மறைந்தது. கூண்டில் சிறுத்தை சிக்கியதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஏற்கெனவே மோத்தேபாளையம் கிராமத்தில் அட்டகாசம் செய்த சிறுத்தையை சிறுமுகை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடித்தது குறிப்பிடத்தக்கது.