கோயம்புத்தூர்: இன்று 218-வது கோயமுத்தூர் தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அவரது ட்விட்டர் பக்கத்தில் கோயமுத்தூர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். ’கோவை தினத்தை’ கொண்டாடும் வகையில், தனியார் பள்ளியில் மாணவர்கள் 'Happy coimbatore day' எழுத்து வடிவில் நின்று கொண்டாடினர்.
இந்நிலையில் 2023 ஜனவரி மாதம் நடைபெற உள்ள ’கோவை விழா’ 15வது பதிப்பின் லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி, கோவை ஸ்மார்ட் சிட்டியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆகியோர் லோகோவை வெளியிட்டனர். இதில் துணை மேயர் வெற்றி செல்வன் உட்பட கோவை விழா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தனியார் அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ”15-வது கோவை விழா 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை மக்கள் இயக்கமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று அதற்கான லோகோ வெளியிடப்பட்டுள்ளது. 15வது கோவை விழாவில் 15 நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு மாத காலத்தில் இது குறித்து மக்களிடையே தெரிவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கோவை மக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அவர்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கடந்த முறை பொதுமக்களுக்கு இதில் கலந்து கொள்ள ஏற்பட்ட சில இடர்பாடுகள் இம்முறை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூட்டத்தை கட்டுபடுத்த மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வரை அனுமதிக்கபடுவர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். விஐபி-களுக்கு தனியிடம் பொதுமக்களுக்கு தனியிடம் என பிரித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: காவல், நீதி துறைகள் மீது நம்பிக்கை உள்ளது - நடிகர் சூரி கருத்து!