கோயம்புத்தூர்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் காந்திய வழியில் பாதை யாத்திரையை முன்னெடுத்துள்ளனர். கோயம்புத்தூரில் இருந்து 550 கி.மீ., தூரம் 56 பேர் 18 நாள்கள் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையின் பொறுப்பாளர் மகாத்மா சீனிவாசன் தலைமையில் 56 பேர் நடைபயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த நடைபயணத்தை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, “பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டியில் குறைந்தபட்ச வரி விதிக்க வேண்டும்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியைப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கின்றார். இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும்.
பாகிஸ்தானில் மொழிப் பிரச்னையால் பிரிவினை ஏற்பட்டது. இந்தியாவிற்கு அந்த நிலை வரக்கூடாது.
பாஜக இங்கு இன, மொழி விவகாரங்களை கிளப்புகின்றனர். இலங்கை பிரச்னை வேறு , இந்திய பிரச்னை வேறு. இந்தியாவில் மக்கள் காலம் தாழ்த்திதான் முடிவெடுப்பார்கள். அதிமுக ஆட்சியை 10 ஆண்டுகளுக்குப் பின்பு தூக்கி எறிந்ததுபோல, மத்தியில் 10 ஆண்டுகளுக்கு பின்பு மாற்றம் வரும்” என்றார்.
இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் டெல்லியில் தர்ணா - ராகேஷ் திகெய்த் பங்கேற்பு