கோவை மாவட்டம், கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா. கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட இவர் மக்களின் ஆதரவோடு வெற்றியும் பெற்றார். ஆனால், தொடர்ச்சியாக இவரை பணி செய்யவிடாமல் சிலர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை சரிதா அளித்துள்ளார்.
அந்த புகாரில், தான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உட்கார விடாமல் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். ஊராட்சி எல்லையிலுள்ள தகவல் பலகை, ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் "ஊராட்சி தலைவர் சரிதா" என தனது பெயரை எழுதவிடாமல் தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊராட்சி மன்ற நாற்காலியில் உட்கார்ந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக சரிதா தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து பொள்ளாச்சி டிஎஸ்பி கே.ஜி.சிவக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
முன்னதாக, ஆகஸ்ட் 15ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த அமிர்தம் என்ற ஊராட்சி தலைவரை தேசியக் கொடி ஏற்றவிடாமல் சிலர் தடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு தேசியக் கொடியினை ஏற்றவைத்தார்.
தற்போது அதேபோல், கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பட்டியலின தலைவரின் பெயரை அலுவலகத்திலும், ஊர் எல்லை பலகையிலும் எழுதவிடாமல் தடுத்திருப்பதுடன், நாற்காலியில் அமரக்கூடாது என மிரட்டுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:உரிமையை மீட்டெடுத்த ஊராட்சி மன்ற தலைவர் - மாவட்ட ஆட்சியர், எஸ்பி முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றினார்!