போலி இ-பாஸை பயன்படுத்தி வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து கோவைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 23) அதிகாலை கருமத்தம்பட்டி சோதனைச்சாவடியில் வருவாய்த் துறை, காவல் துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கோவை வந்த சொகுசுப் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஒட்டப்பட்டிருந்த பாஸை காவல் துறையினர் க்யூ.ஆர். குறியீடு மூலம் சோதனை செய்துள்ளனர். அப்போது இ-பாஸ் போலியானது என்பது தெரியவந்தது.
சுக்காராம் என்ற பெயரில் ஏற்கனவே பெறப்பட்டிருந்த இ-பாஸை மாற்றி சொகுசுப் பேருந்தில் ஒட்டி பயணம் செய்தது தெரியவந்தது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களைக் கடந்து தமிழ்நாட்டிற்குள் இந்தப் போலி பாஸ் மூலம்தான் பேருந்து கடந்துவந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து பேருந்தில் பயணித்த 30 பேருக்கும் கரோனா வைரஸ் (தீநுண்மி) கண்டறிதல் சோதனை செய்யப்பட்டது. மேலும், பேருந்தை பறிமுதல்செய்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...'உச்ச நீதிமன்ற கட்டளைகளை அரசு பின்பற்ற வேண்டும்'- மு.க. ஸ்டாலின் அறிக்கை!