கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் தனியார் சிமெண்ட் நிறுவனமான ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து மாசு கலந்த புகை அதிகமாக வெளியேறுவதாக பல நாள்களாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதை கண்டித்து அப்பகுதி பெண்கள் அனைவரும் அந்த ஆலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
எனவே, மக்களுக்கு பாதிப்பை தரும் வகையில் செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலையை மூடக்கோரியும், வழக்குகள் தொடுக்கப்படுவதை திரும்பப் பெற வலியுறுத்தியும் மதுக்கரை சந்திப்பில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஏசிசி சிமெண்ட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், மூடவில்லை என்றால் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தனர். வைரஸ் தொற்று பரவும் அபாய நிலையில் ஒரே இடத்தில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.