கோயம்புத்தூர்: கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி, மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றது. இதில் அங்கு பாதுகாவலராக இருந்த ஓம் பகதூர் என்பவரைக் கொலை செய்து விட்டு, சில விலையுயர்ந்த பொருட்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, பிஜின், குட்டி, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ் ஆகிய 10 பேர் விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்த வழக்கில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கியமாக சென்னை, கோயம்புத்தூர் மற்றும் உதகமண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டி, சசிகலா, சிகலா உறவினர் விவேக், மர வியாபாரி சஜீவன் அவரது சகோதரர் சிபி, சுனில், அதிமுக பிரமுகர் அனுபவ ரவி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் கார் ஓட்டுநர் கண்ணன் மற்றும் பிஜின் சகோதரர் மோசஸ் ஆகியோர் உள்பட 220 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் கோட நாடு பங்களாவில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக தொழிலதிபர் செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நேற்று (ஜூலை 8) செந்தில்குமாரிடம் 7 மணி நேரமும், அவருடைய தந்தை ஆறுமுக சாமியிடம் 4 மணி நேரமும் தனித்தனியாக தனிப்படை போலிசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஆபத்து; பாதுகாப்பு கேட்டு ஜெயக்குமார் மனு