கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் முத்துசாமி வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய இருசக்கர வாகனம், கார்களை அடமானம் வைப்பவர்களுக்கு பணம் வாங்கிக் கொடுக்கும் தொழிலை செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மதுக்கரையைச் சேர்ந்த சலீம் என்பவர் கொடுத்த காரை, கரும்புக்கடையைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரிடம் அடமானம் வைத்து நான்கு லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகத் தெரிகிறது.
இந்நிலையில் மணிகண்டன் அடமானத்திற்கு வைத்த கார் திடீரென மாயமாகியுள்ளது. இதனையறிந்த சதாம் உசேன், காருக்கான பணத்தைக் கேட்டு மணிகண்டன், சலீல் இரண்டு பேரையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்று அவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தலைமறைவாகினர்.
இதில் படுகாயமடைந்த மணிகண்டன் கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கடத்தல் கும்பலான கரும்புக்கடையைச் சேர்ந்த சதாம் உசேன், இம்ரான், முன்னா, சுல்தான், சானவாஸ் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த குனியமுத்தூர் காவல் துறையினர், தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள நபர்களைத் தேடி வருகின்றனர்.
கூடலூரில் தலைமறைவாக இருந்த சென்னையைச் சேர்ந்த முன்னா (32) என்பவரை குனியமுத்தூர் தனிப்படை காவல் துறையினர், கூடலூர் காவல் துறையினரின் உதவியோடு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முன்னா மீது 2011ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியில் ஒரு கொலை வழக்கும், 2013ஆம் ஆண்டு திருநெல்வேலியில் வெடி மருத்து வழக்கும் சி.பி.சி.ஐ.டியில் உள்ளது. மேலும், 2015ஆம் ஆண்டு புழல் சிறை கலவரத்திலும் தொடர்புடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கடன் கொடுக்காததால் ஆத்திரம் - தொழிலதிபரை கடத்திய நான்குபேர் கைது