கோயம்புத்தூர் தேர்நிலைத் திடலில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் (மார்ச் 31) வருகைதந்தார். இவர் வருகையையொட்டி புலியகுளம் பகுதியிலிருந்து தேர்நிலைத் திடல் வரை பாஜக ஆதரவாளர்கள் இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணியானது டவுன்ஹால் பகுதியில் வரும்போது பேரணியில் கலந்துகொண்டவர்கள் 'பாரத் மாதாகி ஜே' என்ற முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த இஸ்லாமிய மக்கள் 'அல்லாஹு' என்ற கோஷங்களை எழுப்ப இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது.
அந்நிலையில் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கடைகளை மூட வலியுறுத்தி செங்கற்களை வீசினர். இந்தக் காணொலி ஒன்று வெளியாகி அதிகம் பகிரப்பட்டுவந்தது.
இந்தக் காணொலியில் ஒருவர் கற்களைக் கொண்டு காலணி கடையைத் தாக்கும் செயல் பதிவாகியிருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். பாஜகவின் இப்பேரணிக்கு காவல் துறை அனுமதி வழங்காத நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியற்காக பாஜக, கோயம்புத்தூர் மாவட்டத் தலைவர் நந்தகுமார், இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் கிஷோர், மாவட்டச் செயலாளர் தசரதன், மாநிலக் குழு உறுப்பினர் குணா ஆகியோர் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், கற்கள் வீசி தாக்கப்பட்ட காலணியகம் கடையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் சென்று கடை உரிமையாளரிடம் சம்பவம் பற்றி கேட்டறிந்தார். அதன்பின் அங்கிருந்து செல்லும்போது காலணி ஒன்றை கமல் ஹாசன் வாங்கிச் சென்றார்.