தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி அருகே உள்ள இரட்டைமடை தோட்டம் பகுதியில், கேரளாவைச் சேர்ந்த சஞ்சய் ஆண்டனி என்பவருக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளது. இவரது தோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரவு நேரங்களில் கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள் குழி தோண்டி புதைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் (ஏப்.07) இரவு அதிக அளவில் லாரிகள் கேரளாவிலிருந்து தமிழ்நாடு எல்லைக்கு வந்ததால் அப்பகுதி விவசாயிகள் சந்தேகமடைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சஞ்சய் ஆண்டனியின் தோட்டத்திற்கு மூன்று டிப்பர் லாரி மூலம் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவு, நகராட்சிக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டது தெரிய வந்தது.
இதனைப் பார்த்த உழவர்கள் மூன்று டிப்பர் லாரிகளையும், குழி தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தையும் சிறைப்பிடித்தனர். அப்போது ஓட்டுநர் உள்பட 10 பேர் தப்பி ஓடினர்.
இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், ”கேரளத்தில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை பொள்ளாச்சிக்கு அருகே உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறதாம். சூழலை அழிக்கும் சமூகவிரோத செயல்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. இரு மாநில அரசுகளும் இதை உடனடியாகக் கவனிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’மோடி இப்படிதான் பதில் சொல்லி இருப்பாரு’ - ட்விட்டரில் டெமோ காட்டும் சு சுவாமி