கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்: கோவையில் 15 பள்ளிகள் இயங்கவில்லை - private schools
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி சூறையாடப்பட்ட விவகாரத்தில் தனியார் பள்ளிகள் இன்று இயங்காது என தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவித்ததை தொடர்ந்து, கோவை புறநகர் பகுதிகளில் 12 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கன்னியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி ஶ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி வாகனங்கள், உடைமைகளுக்கு தீவைக்கப்பட்டது.
தனியார் பள்ளி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் தனியார் பள்ளிகள் இயங்காது என்று தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் நலச்சங்கம் அறிவித்தது. இந்நிலையில், இன்று பள்ளி இயங்குமா? இயங்காதா என்ற கேள்வி எழுந்த நிலையில், தனியார் பள்ளிகள் வழக்கம் போல இயங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று வழக்கம் போல இயங்குகின்றன. இருப்பினும் புறநகர் பகுதிகளில் சுமார் 12 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக காரமடையில் 7 தனியார் பள்ளிகள், அன்னூரில் 3 தனியார் பள்ளிகள், சிறுமுகை மற்றும் கருமத்தம்பட்டி பகுதிகளில் தலா ஒரு தனியார் பள்ளி, என சுமார் 12 பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் எச்சரிக்கையை மீறி இன்று விடுமுறை அளித்துள்ளன.
அதுபோல் கோவை நகரில் நேசனல் மாடல் ,வித்ய நிகேதன், சுகுணா ஆகிய 3 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற தனியார் பள்ளிகளில் வழக்கம்போல் செயல்படுகிறது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: மாணவியின் பெற்றோரை சந்தித்த பாலகிருஷ்ணன்