மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை காருண்யா நகர் பகுதியில் உள்ள சீசா தொண்டு நிறுவனமும் காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகமும் இணைந்து பழங்குடியின இளைஞர்களுக்கான கபடி போட்டி, பெண்களுக்கான கிராமிய சமையல் போட்டி ஆகியவற்றை நடத்தின.
காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தொண்டாமுத்தூர் பகுதியைச் சுற்றியுள்ள 18 மலைக் கிராமங்களிலிருந்து வந்த பழங்குடியின இளைஞர்கள் ஏராளமானோர் கபடிப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கபடி போட்டியில் முதல் பரிசு வென்ற அணிக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும் சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ஆறாயிரம் ரூபாயும் மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு மூன்றாயிரம் ரூபாயும் சுழல் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
இதேபோன்று பழங்குடியின பெண்களுக்கான கிராமிய சமையல் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பெண்கள் பல்வேறு நவதானிய சமையல்களை செய்து அசத்தினர். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இப்போட்டிகளை சீசா தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஷில்பா சாமுவேல், சாமுவேல் பால் தினகரன் ஆகியோர் ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைத்து தொடங்கிவைத்தனர்.