கோயம்புத்தூர்: ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர், ஆசிப் முஸ்தஹீன் (30). இவர் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஈரோடு போலீசார் அவரை ஊபா (Unlawful Activities (Prevention) Act) சட்டத்தில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் கோவை மத்திய சிறை ஜெயிலர், கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஆசிப் முஸ்தஹீன் அறையினை சோதனையிட்டபோது, அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரை கைப்பற்றி உள்ளார். அதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியினை வரைந்து வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஜெயிலர் அந்த பேப்பரை கைப்பற்றியதுடன், சிறை குறிப்பேடுகளில் இது குறித்து பதிவும் செய்துள்ளார். மேலும், இது குறித்து முஸ்தஹீனிடம் கேட்டபோது, நீதிமன்றத்திற்கு மனுக்களை எழுதுவதற்காக கொடுக்கப்பட்ட பேப்பரில் ISIS அமைப்பின் கொடிகளை வரைந்து இருப்பதும், இது இஸ்லாமிய அரசின் கொடி, இந்த கொடியை வைத்திருப்பதில் தவறில்லை என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜெயிலர் சிவராஜன், சிறை வளாகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஆசிப் முஸ்தஹீன் விரைவில் சிறையிலிருந்து வெளியேறுவேன் எனவும், அப்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்காக ஜிஹாத் வேலையைத் தொடர்வேன் எனவும், அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள், சிறைச்சாலையும் இருக்காது என மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஜெயிலர் சிவராஜன் கொடுத்த புகாரின் பேரில், ஆசிப் முஸ்தஹீன் மீது மீண்டும் UAPA சட்டம், கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆசிப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பேப்பர் கொடியினையும், போலீசாரிடம் ஜெயிலர் ஒப்படைத்துள்ளார். கோவை மத்திய சிறையில் கைதி ஒருவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் கொடியினை வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் 6.50 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது!