கோவை கொடிசியா வளாகத்தில் சர்வதேச பொருள் உற்பத்தி கண்காட்சியின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இக்கண்காட்சியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சிறு குறு தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து 125 நிறுவனங்களும், மலேசியாவிலிருந்து 16 நிறுவனங்களும், ஹரியானாவிலிருந்து 25 நிறுவனங்களும், உத்தரகாண்டிலிருந்து 10 நிறுவனங்களும் கலந்து கொண்டு, தாங்கள் தயாரித்த இயந்திரங்கள், புதிய தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தினர்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சம்பத், தற்பொழுது நடைபெற்று வரும் கண்காட்சி தமிழ்நாட்டை மென்மேலும் வளர செய்யக் கூடிய அமைப்பில் இருக்கிறது என்றும், ஏற்கெனவே அரசு விமானத்துறையில் பல்வேறு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது என்றும், இனியும் மென்மேலும் இயந்திரங்கள், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயோ டெக் பார்க் ஒன்று அமைத்து வருவதாகவும், அது முழுமையடைந்தால் கோவை, அண்டை மாவட்டங்களில் இருந்து பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், ராணுவத் தளவாடங்களுக்கு புதியத் திட்டங்களை அதிகரித்து வருவதாகவும் அதனால் நன்மைகள் பலவும் பெறுவோம் என்றும் அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சம்பத், தமிழ்நாடு பொருளாதாரம் கொரோனா வைரஸால் பாதிப்பு அடையவில்லை என்றும், தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள், மற்ற நாட்டுத் தலைவர்களின் இந்தியா வருகையும் இந்தியப் பொருளாதாரம், தமிழ்நாடு பொருளாதாரத்தை மென்மேலும் உயர்த்த வழி வகுக்கிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க:நீர்வழித்தடங்களை ஆக்கிரமிக்கும் சிமெண்ட் ஆலைகள் - மத்திய நீர் வாரிய விஞ்ஞானியிடம் விவசாயிகள் புகார்