கோவிட் - 19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும்விதமாக 31ஆம் தேதி வரை அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர மற்ற எந்த வாகனங்களும் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படாது எனத் தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கோவையை அடுத்த தமிழ்நாடு - கேரள இரு மாநில எல்லையான வாளையாறு பகுதியில் இன்று காலை முதல் வாகன சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரள எல்லையிலிருந்து தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குப் பயணப்பட்டிருந்த அனைத்து வாகனங்களும் 31ஆம் தேதிவரை மீண்டும் வரக்கூடாது என அறிவுறுத்தலோடு திரும்ப அனுப்பப்பட்டுவருகின்றன. இந்தப் பணிகளை கோவை மாவட்ட காவல் துறையினரும், சுகாதார அலுவலர்களும் மேற்கொண்டுவருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி , ”கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு தற்காப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெறுகின்றது. கேரள எல்லையோரத்தில் மருத்துவக் குழுக்கள் தீவிர சோதனை நடத்திவருகின்றன.
கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு அத்தியாவசிய பொருள்களுடன் வரக்கூடிய வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றன. பொதுமக்கள், தனியார் வாகனங்கள், பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தி திருப்பி அனுப்பப்பட்டுவருகின்றனர்.
இந்தப் பணி வரும் 31ஆம் தேதிவரை தொடரும். மாநில எல்லைகளில் நடந்து செல்பவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. இந்தப் பணியை மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் கரோனா சோதனைக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் கரோனா அறிகுறி இருந்த ஐந்து பேரில் மூன்று பேருக்கு கோவிட்-19 இல்லை என முடிவு வெளியாகியுள்ளது. நாளை காலை முதல் மாலைவரை வீட்டில் இருக்க பிரதமர் அறிவுறுத்தியிருக்கும் நிலையில் மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனக் கூறினார்.
வாளையாறு சோதனைச்சாவடியில் ஆட்சியர் ராசாமணி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டபோது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : கரோனா பாதிப்பு: தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய நீதிபதி