கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பகுதியில் ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவியாகப் பணியாற்றி வருபவர், சரிதா. பட்டியலினத்தைச் சேர்ந்த சரிதாவிற்கு அதே பகுதியில் வசிக்கும் உசிலை மணி (எ) பாலசுப்ரமணியம் என்பவர், சாதிய ரீதியாக மிரட்டல் விடுப்பது, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள தலைவர் இருக்கையில் அமரக்கூடாது என ஆதிக்கத் தொனியில் பேசுவது, பெயர்ப் பலகையில் பெயரை மாற்றக்கூடாது என்பது போன்ற தொந்தரவுகளைக் கொடுப்பதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தார்.
இது தொடர்பாக, துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் விசாரணை நடத்திவருகிறார். இந்தப் புகாரின் பேரில் பாலசுப்ரமணியம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் வழக்குப்பதிவு செய்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜெ. கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத்தலைவி சரிதா, குற்றம்சாட்டப்பட்டுள்ள உசிலை மணி (எ) பாலசுப்ரமணியம் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், மூன்று வாரத்திற்குள் உரிய விளக்கத்தை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ’ஊராட்சி மன்றத் தலைவர் உயிருக்கே பாதுகாப்பு இல்லையா?' - ஸ்டாலின் கண்டனம்