அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆகஸ்ட் 5) வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்து பூஜையை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள பாஜக, இந்து அமைப்பினர் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து மதுக்கரை பெருமாள் கோயில் வரை பாஜக, இந்து அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ராமரின் புகைப்படத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சென்றதால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுக்கரை காவல்துறையினர், ஊர்வலம் சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், சிறிதுநேரம் காவல் துறையினருக்கும் ஊர்வலம் சென்றவர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
அதன்பின் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ராமரின் புகைப்படத்தை மதுக்கரை பெருமாள் வீதியில் உள்ள கோயிலில் வைத்து வழிபட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: இலங்கை தாதா அங்கொட லொக்கா வழக்கில் திடீர் திருப்பம்!