கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு, மரங்கள் விழுந்து பல்வேறு வீடுகள் சேதமாகின. இந்நிலையில், வால்பாறையில் உள்ள எம்ஜிஆர் நகரில் ஸ்டெல்லா என்பவரின் வீட்டின் மீது மேல் பகுதியில் மரம் விழுந்து பாதுகாப்புச் சுவர் இடிந்து சேதமடைந்தது.
மேலும் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள டோபி காலணிக்குள் 10க்கும் மேற்பட்ட வீட்டினுள் மழை நீர் புகுந்துள்ளது. அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் மழை நீர் புகுந்ததால் பணிமனையில் இருந்த இயந்திரங்கள் முழுவதும் சேதமடைந்தன.
தற்போது டோபி காலணியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அரசு கலை அறிவியல் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பேரிடர் குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று (ஆகஸ்ட் 6) ஒரே நாளில் மட்டும் வால்பாறையில் 231 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து வால்பாறையில் மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூணாறில் கடும் நிலச்சரிவு – 80 பேர் வரை காணவில்லை; 5 பேர் சடலமாக மீட்பு!