கோயம்புத்தூர்: கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனியாக இருக்கும் வீடுகள் மற்றும் குடும்பத்துடன் வெளியூர் செல்லும் நபர்களின் வீடுகளை குறி வைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருட்டுச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில், கோவில்பாளையம் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ‘தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்க வெளியே செல்பவர்கள், குடும்பத்துடன் அனைவரும் செல்லாமல் வீட்டில் யாரேனும் ஒருவர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவசர வேலையாக குடும்பத்துடன் வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் வீட்டில் கதவை உட்புறமாக தாழிட்டு கொண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தால், அந்த வீடு காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும்.
அறிமுகம் இல்லாதவர்கள் யாரேனும் முகவரி கேட்டோலோ அல்லது தண்ணீர் கேட்டு வந்தாலோ அவர்களிடம் இருந்து பெண்கள் விலகி இருக்க வேண்டும். இதன் மூலம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார். இவ்வாறு வெளியான காவல் உதவி ஆய்வாளரின் விழிப்புணர்வு வீடியோ அப்பகுதி மக்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சிசிடிவி: எலக்ட்ரிக்கல் கடையில் தீக்குச்சிகல் உதவியுடன் திருட்டு