கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்த கொள்ளை, நகைப் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளைக் காவல் துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில் பொள்ளாச்சி வால்பாறை ரோடு பகுதியில் கோட்டூர் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்கிற கீரி கார்த்தி (31) எம்.டெக்., பி.எல். பட்டதாரி, அவரது உறவினர் பாலசுந்தரம் (22) பி.இ. பட்டதாரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அவரது நன்பர் சிவக்குமார் (22) பி.இ. பட்டதாரி ஆகியோர் இருந்தனர்.
இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்கிற கீரி கார்த்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள், நகை பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதும் இவர் காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், இவர்கள் மூவரும் கோவை பகுதியில் கல்லூரியில் படிக்கும்போது ஒரே விடுதியில், தங்கிப் படித்து வந்ததாகவும் ஏற்கனவே நகை பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த சுந்தரபாண்டியன் அவரது உறவினர் பாலசுந்தரம், அவரது நண்பர் சிவகுமார் ஆகிய இருவரையும் கூட்டு சேர்த்து கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக கோவை, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நகை பறிப்பு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து இரண்டு சொகுசு கார்கள், இருசக்கர வாகனம், 20 பவுன் நகை ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இந்தி படித்தால் தான் அரசு வேலையா? - கனிமொழி பாய்ச்சல்