கோயம்புத்தூர்: சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் நேற்றைய தினம் (ஆக 16) போக்குவரத்து கழகம் சார்பில், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குதல், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
மேலும் கோவை மாவட்ட பணிமனை அளவில் பணியாற்றுபவர்களின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.
அப்போது திரீரென மேடைக்கு ஆறு மாத கைக்குகுழந்தையுடன் வந்த அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவர், அமைச்சரின் காலில் கைக்குழந்தையுடன் விழுந்து பணியிட மாறுதல் தொடர்பாக கோரிக்கை மனு வழங்கினார். இக்கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்தார். மேடையில் அமைச்சர் காலில் கைக்குழந்தையுடன் விழுந்து கோரிக்கை வைத்த ஓட்டுநரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ஓட்டிநர் கண்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தனு சொந்த ஊர் தேனி என்றும், தனக்கும் ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாகவும், தனது இரண்டு பெண் குழந்தைகளையும் தனது பெற்றோர்கள் தான் பார்த்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது பெற்றோர்களின் வயது காரணமாக அவர்கள் குழந்தையை பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், அவர்களை சொந்த ஊரிலிருந்து கோவைக்கு அழைத்து வருவது இயலாத சூழலாக உள்ளதாகவும் தெரிவித்த ஓட்டுநர் கண்ணன். தனக்கு தன்னுடைய சொந்த ஊருக்கே பணி மாறுதல் வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை வைததாக தெரிவித்தார்.
மேலும் பணி மாறுதல் குறித்து பலமுறை பொது மேலாளரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், அமைச்சரை நேரில் பார்த்து குழந்தையுடன் கோரிக்கை வைத்ததாகவும், அமைச்சர் தனது பிரச்சினை குறித்து பேசி தீர்வு காணப்படும் என உறுதியளித்ததாகவும் கூறினார்.
இந்நிலையில் ஓட்டுநர் கண்ணனின் கோரிக்கையை ஏற்று தேனி கிளைக்கு பணியிட மாறுதல் வழங்கி, கோவை மண்டல போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். நாளைய தினம் கண்ணம் இந்த உத்தரவை பெற உள்ள நிலையில், ஓட்டுநர் கண்ணன் முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து, தேனியில் இருந்து வீடியோ ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் - நடந்தது என்ன?