கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அதன் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன், "நூறு ஆண்டு காலமாகப் போராடிப் பெற்ற சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு, மனித உரிமைகள் போன்றவை மத்தியில் ஆளும் பாஜக அரசால் பறிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அதிமுக அரசும் துணை போய் ஒரு பினாமி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை ஒழிப்பதற்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளித்தால் மட்டும் தான், தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜக அரசை அழித்து மதச்சார்பற்ற மாநிலத்தை கொண்டு வர முடியும்.
அதிமுக அரசு பாஜகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியதே அண்ணாவிற்குச் செய்த பெரிய துரோகம். மக்களுக்குத் துரோகம் இழைக்கின்ற பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் முனைப்புடன் செயல்பட்டு அக்கட்சிக்கு எதிராகப் பரப்புரை மேற்கொள்வோம்" என்றார்.
இதையும் படிங்க: 'பாஜக- அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்’ அமித் ஷா