கோவை மாவட்டம், மரக்கடை பகுதியைச் சேர்ந்த முகமது நிஷார் என்பவர், அப்பகுதியில் செருப்புக் கடை நடத்திவருகிறார். 28 வயது நிரம்பிய இந்நபருக்கும், அவரது மனைவியான 16 வயது நிரம்பிய சிறுமிக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் வசித்துவந்த சிறுமிக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (23) என்ற இளைஞருக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிந்த முகமது நிஷார் தன் மனைவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி ரஞ்சித்குமாருடன் அவர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் முகமது நிஷார் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 16 வயது சிறுமியை முகமது நிஷார் திருமணம் செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து இவ்வழக்கு, அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், 16 வயது சிறுமியை திருமணம் செய்த முகமது நிஷார், சிறுமியை கடத்திச் சென்ற ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 16 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த முகமது நிஷாரின் பெற்றோர் அப்துல் சலாம், பர்சானா ஆகியோரும் குழந்தைத் திருமணத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை, டிப்ளமோ படித்தவருக்கு வேலை உண்டு - செங்கோட்டையன்