கோயம்புத்தூர்: உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவின் வீட்டிற்குச் சென்றால் பாட்டில்களில் வரையப்பட்ட ஓவியங்கள்தான் நம்மை வரவேற்கின்றன. பல வண்ணங்களில் அவர் தீட்டியுள்ள ஓவியங்கள் ஒவ்வொன்றும் கண்ணைக் கவந்திழுத்து, அதனை வாங்கத் தூண்டுகின்றன.
கலைகளில் ஆர்வம்கொண்ட ஐஸ்வர்யாவுக்கு கரோனா ஊரடங்கு காலத்தில் வீணாக தன் பொழுதைக் கழிப்பதில் விருப்பமில்லை. என்ன செய்யலாம் என அவர் சிந்திக்கும்போது தனக்குப் பிடித்த ஓவியத்தைத் தேர்ந்தெடுத்தார். அதையே கொஞ்சம் வித்தியாசமாகச் செய்தால் என்ன? என்ற எண்ணம்தான் அவரை தொழில்முனைவோராக்கியுள்ளது.
யார் இந்த ஐஸ்வர்யா, பிகாசோ உறவினரா?
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த ஐஸ்வர்யா, திருமணத்திற்கு பின்னர் வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தைக் கவனித்து வந்தார். தனது ஓய்வு நேரங்களை தனக்கு பிடித்தமான ஓவியத்திற்கென ஒதுக்கி, தற்போது வீட்டையே கலைக் கூடமாக மாற்றியுள்ளார்.
முதலில் தன்னுடைய மன திருப்திக்காக இதைச் செய்த ஐஸ்வர்யா, நாளடைவில் தனது பேஸ்புக் பக்கத்திலும் அதனைப் பகிரத் தொடங்கினார். பலரும் சாலையோரங்களிலோ, பிற இடங்களிலோ மதுப்பாட்டில்களைக் கண்டு முகம் சுழித்திருப்போம். மாறாக ஐஸ்வர்யா, அருவருப்பான ஒன்றை அழகாக்க முயன்றுள்ளார்.
தான் வரைந்த ஓவியங்களைக் காணும் உறவினர்களும், நண்பர்களும் தங்களுக்கு பாட்டிலில் வரைந்த ஓவியங்களைத் தருமாறு கேட்டுள்ளனர். அடடே..! நல்ல ஐடியாவா இருக்குதே என அதற்கென தனிப் பக்கத்தை உருவாக்கி தற்போது வியாபாரத்தைத் தொடங்கிவிட்டார். அவரின் பாட்டில் ஓவியங்களுக்கென ஆர்டர்களும் குவிந்து வருகின்றன.
ஒரு குழந்தைக்கு தாயான ஐஸ்வர்யாவிற்கு வீட்டு வேலைகள் தலைக்கும் மேல் கிடக்கின்றன. எப்படி தனது கனவுக்காவும் நேரத்தை ஒதுக்குகிறார் என்ற சூட்சமத்தை மெல்ல அவரிடம் கேட்டோம். கொஞ்சம் சிரமம் தான் என்பவர்,தனது குடும்பத்தினர் முழு ஆதரவைத் தருவது தனக்கு பேரூதவியாக உள்ளது எனப் புன்னகைக்கிறார்.
உடைந்த டேபிள் ஃபேன், கைப்பை, தேங்காய் தொட்டிகள் என அனைத்திலும் ஐஸ்வர்யாவின் கைவண்ணம் வீடு முழுக்க நிறைந்துள்ளன. ஒருவருடைய உழைப்புக்கான அங்கீகாரம் அவரை மேலும் உழைப்பை நோக்கி உந்தித் தள்ளும். அது ஐஸ்வர்யாவின் வாழ்வில் நிஜமாகியுள்ளது. ஐஸ்வர்யா ஆரம்ப காலக்கட்டத்தில் வரைந்த ஓவியங்களுக்கு கிடைத்த ஊக்கத்தால் தற்போது, 3d லைட்டிங் ஆர்ட், மண்டல ஆர்ட் என விதவிதமாக வரையத் தொடங்கிவிட்டார்.
’ஐஸ்வர்யா வரையுறதுல விருப்பமில்ல’
தொடக்கத்தில் ஐஸ்வர்யா வரைவதை அவரது கணவர் கோகுல் விரும்பவில்லை. தனது கனவைக் கணவரே புரிந்து கொள்ளாத நிலையில் ஐஸ்வர்யா தூரிகைப் புறந்தள்ளவில்லை. தொடர்ந்து வரைந்தார். நாளடைவில் ஐஸ்வர்யாவின் ஆர்வத்தையும், தனித்துவமான ஓவியங்களையும் கண்டு கணவர் கோகுல் பிரம்மிப்படைந்துள்ளார். இப்போதெல்லாம், ஐஸ்வர்யா வரைய அமர்ந்தால் கோகுல் உதவ மறுப்பதில்லையாம்.
வீட்டில் உள்ளவர்களுக்காக நாள் முழுக்க நேரத்தைச் செலவிட்டு கனவுகளைத் தொலைக்கும் குடும்பத்தலைவிகளுக்கு, ஐஸ்வர்யா எனர்ஜி டானிக். தனக்குத் தெரிந்த ஓவியக் கலையை கைத் தொழிலாக்கி, ஆன்லைன் மூலம் விற்பனையைத் தொடங்கியுள்ள ஐஸ்வர்யா மேன்மெலும் வளர வாழ்த்துகள்!
இதையும் படிங்க:'ஓவிய வடிவில் திருக்குறள்' - சர்ரியலிச படைப்புகளால் வியப்பூட்டும் சௌமியா