கோயம்புத்தூர்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவருக்கு தொடர்புள்ள 52 இடங்களிலும் சோதனை நடக்கிறது.
கோயம்புத்தூரில் பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கோடிக்கணக்கில் ஊழல் செய்திருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென புகார்கள் எழுந்த நிலையில் இந்த சோதனை நடப்பதாக தெரிகிறது.
கோயம்புத்தூரில் எஸ்.பி. வேலுமணி இல்லம், அவரது சகோதரர் அன்பரசன் இல்லம், பொறியாளர் சந்திரபிரகாஷ், சந்திரசேகர் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடக்கிறது. திமுக, தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசியல் பழிவாங்கும் நோக்குடன் இந்த சோதனை நடந்தி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மக்களை தன் பக்கம் இழுக்க திமுக இந்த சோதனையை நடத்துகிறது.
இந்த நடவடிக்கைகள் எங்களை சோர்வடைய வைக்காது, முறைகேடுகள் ஏதும் செய்யப்படவில்லை. இந்த சோதனையால் அதிமுக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்னும் வலுவடையும். இந்தப் போக்கை கைவிட வில்லை எனில் திமுக இன்னும் பின்னடைவைச் சந்திக்கும். திமுக கொடுத்த 506 வாக்குறுதிகளில் ஒன்று, இரண்டை மட்டுமே நிறைவேற்றி வருகின்றனர்.
வெள்ளை அறிக்கையில் ஏதும் இல்லை அதை அவர்களுக்கு சிவப்பு அறிக்கையாக எச்சரிக்கையாக மாறிவிட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்த்துவிட்டு திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை செய்யலாம்” என தெரிவித்தார்.