கோவை வனக்கோட்டத்தில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப்பகுதியில் யானை ஒன்று, உடல் நலக்குறைவால் நடக்க முடியாமல் இருப்பதாக மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதனையடுத்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் உத்தரவின்பேரில், வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்றனர். அப்போது உடல் நலக்குறைவால் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று படுத்திருந்தது.
சம்பவ இடத்தில் யானை இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, வனத்துறையினர் மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து அரசு கால்நடை மருத்துவர் சுகுமார், தேக்கம்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவயிடத்திற்குச் சென்றனர். மேலும் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், கோட்ட உதவி வனப்பாதுகாவலர் செந்தில் குமார் ஆகியோரும் அங்கு விரைந்தனர்.
பின்னர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யானைக்கு மருத்துவர்கள் காது மடலில் ஊசிமூலம் குளுக்கோஸ் செலுத்தினர். யானையின் வாய்ப் பகுதியில் ஏற்பட்ட புண்ணால், உணவு உண்ண முடியாமல், உடல் மெலிந்து இருந்ததால் அதன் வாய்ப்பகுதி முழுவதும் மருந்து தெளித்தனர். தற்போது யானையைக் குணப்படுத்தும் முயற்சியில் மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாப்டூர் வனச்சரகத்தில் யானை எரிப்பு வழக்கு: ஆகஸ்ட் 18இல் தீர்ப்பு