கோவை : குனியமுத்தூர், சுகுணாபுரம்,கோலமாவு மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயது மதிக்கத்தக்க சிறுத்தை கடந்த திங்கட்கிழமை பாலக்காடு சாலையில் உள்ள பாழடைந்த குடோனில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அந்த பாழடைந்த குடோனை வலை கொண்டு மூடிய வனத்துறையினர் குடோனின் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து அதனைபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சி
மேலும் 6 கேமராக்கள் மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து நான்காவது நாளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், இன்று அதிகாலை நேரத்தில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அதில் அதிகாலை நேரத்தில் சிறுத்தை குடோனுக்குள் உலா வருவதும், கேமிராவை உற்றுபார்ப்பதும், கூண்டின் அருகே சென்றுவிட்டு திரும்பவும் பதிவாகி உள்ளது.
போக்கு காட்டும் சிறுத்தை
கடந்த 4 நாட்களாக வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருந்தும் சிறுத்தை கூண்டுக்குள் அகப்படாமல் போக்கு காட்டி வருகிறது. கூண்டுக்கு அருகில் வரும் சிறுத்தை, சாதுர்யமாக அப்படியே திரும்பி செல்வதும், குடோனைவிட்டு வெளியேற இடம் தேடுவதுமாக சுற்றி வருகிறது. இந்த சிறுத்தை, வனத்திலிருந்து மற்றொரு பலம் வாய்ந்த சிறுத்தையால் விரட்டபட்டிருக்கலாம் என கூறும் வனத்துறையினர் ஏற்கனவே கூண்டில் பிடிப்பட்டு வனத்தில் விடுவிக்கப்பட்ட சிறுத்தையாக இருக்க கூடும் எனவும் சந்தேக்கின்றனர்.
காயம் அடைய வாய்ப்பு
மேலும் மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தால் குடோனில் உள்ள பொருட்களில் சிக்கி சிறுத்தை காயமடைய வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டும் வனத்துறை அதிகாரிகள் 4வது நாளாக காத்திருந்து அதனை கூண்டிலேயே பிடிக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த 4 நாட்களாக கூண்டில் வைக்கப்பட்ட உணவை சிறுத்தை சாப்பிடாததால் பட்டினியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் சிறுத்தைக்கு உணவு வழங்க வனத்துறையினர் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க :சும்மா குடும்ப சண்டைதான், விவாகரத்து அல்ல - கஸ்தூரி ராஜா விளக்கம்