கோயம்புத்தூர்: தமிழகத்தில் பிரபலமான சுற்றுலாப் பகுதிகளில், வால்பாறை வெளிநாட்டவர் மற்றும் வெளி மாநிலத்தவர்களைக் கவரும் பகுதியாக உள்ளது. கடந்த சில மாதங்களாக கடும் வெயிலின் தாக்கத்தினால் இருந்த இந்த வால்பாறை, தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகக் குளிர் பிரதேசமாக மாறியுள்ளது. இந்த நிலையில், வால்பாறைக்குச் செல்லும் வழியில் உள்ள கவர்கல் பகுதியில், கரு மேகங்கள் சூழ்ந்தவாறு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது செல்போனில் படம் பிடித்துச் செல்கின்றனர். மேலும், மலைப்பாதையில் செல்லும் போது மரங்கள் காய்ந்து உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் வாகனங்கள், முகப்பு விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், தொடர் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறும், மலைப்பாதையில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால், வனவிலங்குகளைத் துன்புறுத்தாமல் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கடந்த 25 மணி நேரமாக விடாது பெய்யும் கனமழை… முக்கிய அணைகளில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்!