கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டி பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கு சொந்தமான குடோனை அப்துல், ராஜா இருவரும் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த குடோனிலிருந்து தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பாக்கெட்டுகள் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன், பல்வேறு இடங்களிலும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை சாதமாகப் பயன்படுத்தி அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்து வருவதாகவும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு புகார் வந்துள்ளது.
இதனை அடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 586 கிலோ பான் மசாலா பாக்கெட்டுகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே, குடோனை வாடகைக்கு எடுத்த அப்துல், ராஜா இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேக்கு மரத்தை வெட்டி கடத்திய 3 பேர் கைது