கோயம்புத்தூர்: மருதமலை அருகே உள்ள நவாவூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் நவாவூர் பிரிவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை வழங்கிய தடையில்லா சான்றிதழ் காலாவதியானதால் அதனை புதுப்பிக்க ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் வெங்கடேசனை அணுகியுள்ளார்.
அவர் தடையில்லா சான்றிதழ் புதுப்பிக்க 7000 ருபாய் லஞ்சம் வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த துரைசாமி அங்கிருந்து சென்ற நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி வெங்கடேசன் துரைசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு தடையில்லா சான்றிதழை உடனடியாக புதுபிக்குமாறு நெருக்கடி தந்துள்ளார்.
மேலும் தனக்கு பணம் தந்தால் உடனடியாக வேலை நடக்கும் இல்லை என்றால், தடையில்லா சான்றிதழ் இல்லாமல் கடை நடத்துவதாக கூறி கடைக்கு சீல் வைக்க நேரிடும் எனவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து லஞ்சம் தர விருப்பம் இல்லாத துரைசாமி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் துரைசாமியை இன்று தொடர்புகொண்ட வெங்கடேசன் லஞ்ச பணத்தை இன்று ஆர்எஸ் புரம் பால் கம்பனியில் உள்ள தனது அலுவலகத்திற்கு கொண்டு வந்து தருமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் துரைசாமி தெரிவித்ததைவிட்டுு ரசாயனம் தடவிய பணத்தை துரைசாமியிடம் கொடுத்து வெங்கடேசனிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் துரைசாமி வெங்கடேசனின் அலுவலகத்திற்கு சென்று லஞ்ச பணம் 7000 ரூபாயை கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உனவுத் துறை அதிகாரியை கையும் களவுமாக வெங்கடேசனை லஞ்ச பணத்துடன் கைது செய்தனர். தொடர்ந்து அவரை பந்தைய சாலையில் உள்ள உணவு பாதுகாப்பு துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் வெங்கடேசனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து மளிகை கடை உரிமையாளர் துரைசாமி கூறுகையில், “நான் பல ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறேன். உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் வெங்கடேஷ் அவ்வப்போது ஆய்வு என்ற பெயரில் என்னுடைய கடைக்கு வந்து ஆயிரக்கணக்கான மதிப்புள்ள மளிகை பொருட்களை எடுத்துச் செல்வார். எனினும் அதனை பொறுத்துக் கொண்டேன்.
ஆனால் தடையில்லா சான்றிதழ் புதுப்பிக்க நூறு ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் 10 ஆயிரம் ருபாய் லஞ்சமாக கொடுத்தால் தடையில்லா சான்றிதழை புதுப்பிக்க முடியும் என வெங்கடேஷ் தெரிவித்தார். இறுதியாக 7 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே புதுப்பிக்க முடியும் என கண்டிப்புடன் கூறியதால் கடந்த ஒரு வாரமாக சான்றிதழை புதுப்பிக்க முடியாமல் இருந்து வந்தேன்.
இந்நிலையில் இன்று காலை என்னை தொடர்பு கொண்ட வெங்கடேஷன் உடனடியாக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து சான்றிதழை புதுப்பிக்க வேண்டும் என கூறியதால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாமல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தேன். அதன் பேரில் அவர்கள் கொடுத்த அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை வெங்கடேசனிடம் கொடுத்தேன்.
அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் வெங்கடேசனை கைது செய்துள்ளனர். இது போன்ற அதிகாரிகளின் செயலால் மற்ற அதிகாரிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹோட்டலை அபகரித்துக் கொண்டதாக அண்ணாமலை மீது பாஜக நிர்வாகி புகார்!