கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் நிறுத்தப்பட்ட காரில், சிறிய அளவிலான பாம்பு இருந்தை அங்கிருந்த ஊழியர்கள் கண்டுள்ளனர். இதையடுத்து உடனடியாக அதே பகுதியைச் சேர்ந்த பாம்புகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ரதீஷ் என்பவருக்குத் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்குச் சென்ற ரதீஷ், காரில் இருந்த பாம்பை பத்திரமாக மீட்டார். மேலும் பிடிபட்ட பாம்பு பறக்கும் பாம்பு என அறியப்படும் விஷத்தன்மையுள்ள பாம்பு எனவும், இவ்வகை பாம்புகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், காரின் உரிமையாளர் கடந்த சில தினங்களுக்கு முன் ஆனைக்கட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்றதால் அங்கிருந்த மரத்திலிருந்து காரில் தவறி விழுந்திருக்கலாம் எனப் பாம்புகள் பாதுகாப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பிடிபட்ட பறக்கும் பாம்பு மாவட்ட வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பறக்கும் பாம்பினை ஆனைக்கட்டி வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.