கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதையடுத்து கடந்த ஒரு வார காலமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, இடி, மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நேற்று (ஜூலை 19) மதியம் முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்த நிலையில், வால்பாறையை சுற்றியுள்ள கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு மற்றும் புதுத்தோட்டம் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆற்றுப்பகுதிகளில் வசிப்போர் கவனமாக இருக்குமாறு வருவாய்த் துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
![Flood in valparai surrounding rivers](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8094088_rain-in-valparai-2.png)
மேலும், சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுப்பணித் துறையினரும் வருவாய்த்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மட்டும் வால்பாறை நகரில் 70 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
கனமழை காரணமாக மழை நீரானது காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால், சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்தது.
![Rain water in houses of valparai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8094088_rain-in-valparai-5.png)
இதுதொடர்பாக உடனடியாக நகராட்சி ஆணையருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் நேரில் சென்று தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் ஆய்வுமேற்கொண்டார். பின்னர் நகராட்சி ஆணையரின் உத்தரவின்பேரில், மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது.
இதையும் படிங்க: பருவ மழையால் பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு