கோயம்புத்தூர்: சிங்கப்பூரிலிருந்து கோயம்புத்தூருக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கோவை விமான நிலைய வருவாய் புலனாய்வு அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில், நேற்று (அக் 4) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த ஆறு பயணிகளை சந்தேகத்தின் பேரில் வருவாய் புலனாய்வு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது தங்க செயின்கள் மற்றும் வளையல்களை பேண்ட் பாக்கெட்டுகளில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த முகமது அப்சல் (32) , ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல் திருச்சியைச்சேர்ந்த மற்றொரு பயணி கிருஷ்ணன் (66) என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 50 லட்சத்துக்கு மேல் அதிகமாகவும், ஒரு கோடிக்கு குறைவாகவும் இருந்ததால், அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதன்மூலம், சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 5.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் மீதமுள்ள நான்கு பயணிகளும் அலுவலர்களால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து இந்த கடத்தல் தொடர்பாக வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பூண்டு மூட்டைகளுக்குக்கீழ் பதுக்கி வைத்திருந்த 1.15 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது