கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி. அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவர் புதிதாக பெட்ரோல் பங்க் வைப்பதற்காக பல்வேறு இடங்களில் அனுமதி பெற்றுள்ளார். இதற்காக தீயணைப்புத் துறையிலும் அனுமதி பெற இவர் விண்ணப்பித்து இருந்தார்.
இந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை மேற்கொண்ட கோவை மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் பாலசுப்பிரமணியம், பெட்ரோல் பங்க்கிற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தனக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அதற்கு ரூபாய் 40 ஆயிரம் தருவதாகக் கூறிய பாலதண்டாயுதபாணி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினருக்கு புகார் அளித்தார்.
பின்னர், லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினருடைய அறிவுறுத்தலின் பெயரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலரிடம் பாலதண்டாயுதபாணி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ், ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான காவல் துறையினர் தீயணைப்புத் துறை அலுவலகத்துக்குச் சென்று பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர்.
இதையும் படியுங்க:
சிலை கடத்தல் வழக்கு: இரண்டு அமைச்சர்கள் பெயரை பொன் மாணிக்கவேல் வெளியிட கோரிக்கை!