கோவை : டாடா காபி நிறுவனத்திற்கு சொந்தமான பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டம், காபி தோட்டம் உள்ளது. இந்த தேயிலை மற்றும் காபித் தோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகம் சார்பில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தக் குடியிருப்பைச் சேர்ந்த தொழிலாளி ராஜேந்திரன் என்பவரின் வீட்டிலிருந்து கூரை வழியாக நள்ளிரவு 10.50 மணிக்கு புகை வந்துள்ளது. இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு குடியிருப்புக்குள் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர்.
அதற்குள் தீ மளமளவென பரவியது. இதையடுத்து உடனடியாக எஸ்டேட் நிர்வாகத்தினர் வால்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால்,மூன்று வீடுகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறி மேலும் தீ பரவி எரிந்தது.
இதனால் தீயணைப்பு வீரர்களும், எஸ்டேட் தொழிலாளர்களும் தீயை அணைக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர், மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினரும், எஸ்டேட் தொழிலாளர்களும் நள்ளிரவு 2.00 மணியளவில் தீயை அணைத்தனர்.
இதில் 8 வீடுகள் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து, சம்பவயிடத்திற்கு வந்த வால்பாறை காவல்துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : COVID Care Centre: தினமும் 3 ஆயிரம் பரிசோதனைகள் செய்ய முடிவு