கோயம்புத்தூர்: மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் இறுதி நாளான இன்று(நவ.19) திருக்கல்யாண நிகழ்வு ஏராளமான பக்தர்களுடன் களைகட்டியது. கந்த சஷ்டி திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. அதன்படி கோவையில் பக்தர்களால் ஏழாவது படை வீடு என அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 14ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியோடு கந்த சஷ்டி விழா தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடைபெற்று வந்தது. தொடர்ந்து தினமும் சத்ரு சம்ஹாரம் வேள்வி, விநாயகர் பூஜை, சண்முகாச்சனைகளும் நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை ஒட்டி நேற்று(நவ.18) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு பதினாறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பிற்பகல் 3 மணி அளவில் மூலவரிடம் இருந்து வேல் வாங்கி பச்சைநாயகி அம்மனிடம் வைத்து பூஜை செய்யப்பட்டது.
பின்னர் சுவாமி அம்பாளிடம் வேலை பெற்றுக்கொண்டு ஆட்டுக்கிடா வாகனத்தில் கோயிலின் முன்புறம் எழுந்தருளினார். தொடர்ந்து, வீரபாகு தேவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இருவரும் கோயிலை சுற்றி வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து முருக பெருமான் முதலில் தாராகசுரனை வதம் செய்தார். இரண்டாவதாக பானுகோபனை வதம் செய்தார். மூன்றாவதாக சிங்கமுகாசூரனை வதம் செய்தார். நான்காவதாக சூரபத்மனை அவரது வேலால் வதம் செய்தார்.
அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா என பக்தி கோசங்களை முழக்கமிட்டனர். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மருதமலை அடிவார நுழைவாயிலில் இருந்து அடிவாரப் பகுதி முழுவதும் மின்விளக்குகளாலும் மலர் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதேப்போல கோயில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தது. சூரசம்காரனை செய்த சுவாமிக்கு கோபம் தணிக்கும் விதமாக மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தங்க கவசத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கந்த சஷ்டி விழாவையொட்டி கோயிலுக்கு வந்திருந்து திரளன பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சூரா சம்ஹாரத்தை தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் முருகன் வள்ளி தெய்வானை கோயிலைச் சுற்றி வலம் வந்தனர். அதனை தொடர்ந்து இன்று(நவ.19) திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
யாகசாலை கலசங்களில் உள்ள தீர்த்தங்களை கொண்டு மூலவர் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. மஞ்சள் பட்டு உடுத்தி வள்ளியும், சிவப்பு பட்டு உடுத்தி தெய்வானையும், வெண்பட்டு உடுத்தி சுப்பிரமணிய சுவாமியும் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
இதையடுத்து பக்தர்கள் மொய்ப் பணம் வைத்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் 86 ஆயிரத்து 200 ரூபாய் மொய் வைத்தனர். தொடர்ந்து, பாதகாணிக்கை செலுத்துதல் தீபாராதனை நடைபெறும் போது, ஓதுவார்கள் தோவாரப்பாடல் பொற்சுண்ணம் பாடி உரல் இடித்தனர். பின்னர் சுவாமி பல்லாக்கில் வீதி உலா வந்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகப்பை முன்னிட்டு, கோவை மாநகர் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரங்களுடன் சுவாமி ஊர்வலம்!