மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கெஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (25). இவர் கோயம்புத்தூரில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடன் பணிபுரியும் சக காவலர் அருண் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று (ஜூன்.2) இரவு அவரது காதலர் அருண் நீண்ட நேரம் முயற்சித்தும், மகாலட்சுமி அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அருண், அவர் தங்கியிருந்த உப்பிலிபாளையம் குடியிருப்பிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது காவலர் குடியிருப்பின் ஜன்னலில் கயிற்றை கட்டி, முட்டி போட்டு உட்கார்ந்த நிலையில் மகாலட்சுமி உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து மகாலட்சுமியின் உடல் கைப்பற்றப்பட்டு, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே மகாலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மகாலட்சுமியின் உறவினர்கள் பேசுகையில், “வீட்டு ஜன்னலில் தூக்கு போட்டு மகாலட்சுமி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை. அவர் தற்கொலை செய்து கொள்ள கூடியவர் கிடையாது. மிகவும் தைரியமான பெண். காவலர் அருணின் பெற்றோர் இருவரது திருமணத்துக்கும் சம்மதிக்காததால் திருமண பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.
இருப்பினும் அருண் தொடர்ந்து, மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக தொந்தரவு செய்து வந்தார். எனவே மகாலட்சுமி மரணத்தை முறையாக விசாரிக்க வேண்டும்” என்றனர்.
புகாரின் அடிப்படையில் காவலர் மகாலட்சுமி, அருண் ஆகிய இருவரின் அலைபேசிகளையும் கைப்பற்றி, காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : பல்லாவரம் அருகே கஞ்சா வழக்கில் நால்வர் கைது