பொள்ளாச்சியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நவமலை மலைவாழ் மக்கள் இரண்டு பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை, தற்போது ஆண்டியூர், பருத்தியூர், அர்த்தனாரி பாளையம், சேத்துமடை பகுதிகளில் முகாமிட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டியூர் பகுதியில் செல்வகுமார் என்பவரை தாக்கியுள்ளது.
தொடர்ந்து அர்த்தனாரி பாளையம் ரத்தினசாமி என்பவரது தோட்டத்தில் புகுந்து பயிரிட்டுள்ள வாழை மரங்களை சேதப்படுத்தியதோடு, ரத்தினசாமியையும் தாக்கியுள்ளது. இதையடுத்து அர்த்தனாரி பாளையம் விவசாயிகள் ஒற்றை யானையை விரட்டக்கோரி பொள்ளாச்சி வனத்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் யானையால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகவே ஒற்றை காட்டு யானையை விரைவில் பிடிக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றனர்.
இதற்கு மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து பதில் கூறுகையில், யானையைப் பிடிக்க துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு ஒற்றை காட்டு யானை விரைவில் பிடிக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: யானையின் தந்தத்தை திருடிய இளைஞர்கள் கைது