தமிழ்நாடு- கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் கேரள காவல்துறையினர் வாகன சோதனையில் ஈட்டுபட்டிருந்தனர். அப்போது கோவையிலிருந்து வந்த காய்கறி லாரியை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். ஈரோட்டிலிருந்து கேரள மாநிலம் அங்கமாலி என்ற இடத்திற்குத் தக்காளி கொண்டுச் செல்வதாக லாரி ஓட்டுநர் காவல்துறையிடம் கூறினார்
லாரியை சோதனை செய்தபோது தக்காளி பெட்டிகளுக்கு அடியில் 35 சிறிய பெட்டிகளில் சக்தி வாய்ந்த ஜெலட்டின், டெட்டனேட்டர் வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெட்டிகளில் 7,000 டெட்டனேட்டர்களும், 7,500 ஜெலட்டின் குச்சிகளும் இருந்தன. இதையடுத்து, அந்த வெடிபொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், லாரி ஓட்டுநர், கிளீனரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபு (30), தர்மபுரியைச் சேர்ந்த ரவி (38) எனத் தெரியவந்தது. இருவரும் சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலுவாவிற்கு ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர்களை கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.