கோயம்புத்தூர்: திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை வரும் 13 ஆம் தேதி சடடப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிதி நிலை அறிக்கையில் கரோனா நெருக்கடியில் இருந்து தொழில் துறை மீண்டு வரும் வகையிலான அறிவிப்புகள் இருக்கும் என தொழில் முனைவோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஏரியா பெஞ்ச் நடுவர் மன்றம்
இதுதொடர்பாக கொடிசியா அமைப்பின் தலைவர் ரமேஷ் பாபு கூறுகையில், "கரோனா பெருந்தொற்று காரணமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரி விதிப்பு சட்டங்களின் கீழ் சில தளர்வுகள் அளிப்பது மிகவும் உதவியாக இருக்கும். பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தந்து வரும் தொழில்கள் தொடர்ந்து நடத்த உதவியாக அமையும். தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டம், மத்திய விற்பனை வரி சட்டம், ஜிஎஸ்டி சட்டங்களில் சில தளர்வுகளை எதிர்பார்க்கிறோம்.
வாட், ஜிஎஸ்டி நிலுவையில் ஒரு பகுதி வரி செலுத்தும் வகையிலும், வட்டி உள்ளிட்ட தீர்வைகளில் விலக்கு அளிக்கும் வகையிலும் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். வாட், ஜிஎஸ்டி நிலுவையில் உள்ள தணிக்கை விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும்.
மின்சாரம் மற்றும் பெட்ரொலிய பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ஜிஎஸ்டி வரியில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்று முதல் செய்பவர்களுக்கு பதிவு மற்றும் வரி விதிப்பு என உயர்த்த வேண்டும். ஜிஎஸ்டி தொடர்பாக கோவையில் 'ஏரியா பெஞ்ச்' எனும் முறையீட்டு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும். ஜிஎஸ்டி சட்டத்தில் குறிப்பிட்ட கால வரையறுக்குள், திரும்பத் தரும் தொகையை பெற வழி வகை செய்ய வேண்டும்.
ஜீலை - ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டு ஜிஎஸ்டி, வருமான வரி தொகையை கட்ட மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான தாமதக் கட்டணம் தள்ளுபடி செய்ய வேண்டும். கரோனா நெருக்கடியில் இருந்து மீளும் வகையில் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை திருப்பி தர வேண்டும் உள்ளிட்டவற்றை அறிவிப்பதன் மூலம் சிறு தொழில்கள் உயர்வு பெறும் வகையில் நிவாரண நடவடிக்கையாக அமையும்" என்றார்.
குறுந்தொழில் பேட்டை
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், "கரோனா நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் குறுந்தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம். குறிப்பாக குறுந்தொழில் முனைவோர்களுக்கு 4 விழுக்காடு வட்டி என்ற அடிப்படையில் கடன் தர வேண்டும். கரோனா கால கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். கோவையில் குறுந்தொழில் பேட்டை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். குறுந்தொழில் கூடங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். குறுந்தொழில்களை நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க குறுந்தொழில் வாரியத்தை அமைக்க வேண்டும்" என்றார்.
மானியங்கள் கிடைக்க சலுகை
தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் பழனிச்சாமி கூறுகையில், "விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் ஒதுக்க உள்ளது வரவேற்கத்தக்கது. நீர் ஆதாரங்களை பாதுகாக்க இந்த பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இது தவிர பயிர்கடன் விவசாயிகளுக்கு உரிய நேரங்களில் உரங்கள் மானியங்கள் கிடைக்க சலுகைகள் எதிர்பார்க்கப்படுகிறது. தென்னை விவசாயத்தை பாதுகாக்க தென்னை வாரியம் குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர மனித மிருக மோதலில் இருந்து விவசாயிகளும் விவசாய பயிர்களை பாதுகாக்க சிறப்பு திட்டங்கள் அறிவிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'தயார் நிலையில் பள்ளிகள்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்