கோவை: ராஜவீதி பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (ஜுலை 2) கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
அங்கு பாஜகவினர், தடுப்பூசியை இலவசமாக வழங்கிய ஒன்றிய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பேனர் ஒன்றை பள்ளியின் முன்புறம் வைத்துள்ளனர். அதில் தமிழ்நாடு, கோவை மாவட்ட பாஜகவினரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், தடுப்பூசியானது மக்களின் வரிப்பணத்தில்தான் வாங்கப்படுகிறது என்றும், பாஜகவினர் வாங்கி இலவசமாக மக்களுக்கு தரவில்லை என்பதால் இந்த பேனரை எடுக்கும்படியும் சிலர் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனால் பாஜகாவினருக்கும் அங்குள்ள சிலருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் தடுப்பூசி போடும் பணியானது சிறிது நேரம் தடையானது.
எனினும் அங்குள்ள பேனர் அகற்றப்படாமல் இருந்தது மேலும் சர்ச்சையைக் கிளப்பும் என்று எண்ணிய நிலையில், அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.