கோவை ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. அவைகளில் சில யானைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புக்குள் வருவது வழக்கமாக உள்ளது.
இதன் காரணமாக விவசாய பயிர்கள் சேதமாவதுடன் அவ்வப்போது, மனித மிருக மோதல் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. அவ்வாறு வரும் காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி விடுகின்றனர். ஆனால், மீண்டும் மீண்டும் யானைகள் உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் வருவது தொடர்கிறது.
இந்நிலையில், நேற்றிரவு 11 மணி அளவில் கோவை தொப்பம்பட்டி அருகேயுள்ள, கதிர் நாயக்கன்பாளையம் ஸ்ரீ லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் 3 காட்டுயானைகள் உணவைத் தேடி குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் வந்துள்ளன. யானைகள் தெருக்களில் உலா வரும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது.
சர்வ சாதரணமாக 3 காட்டு யானைகள் தெருக்கள் வழியே நடந்து செல்லும் காட்சிகள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் மலையடிவார கிராமப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் அவ்வாறு வெளியே வரும்போது டார்ச்லைட் வைத்துக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் வெளியே வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.