கோயம்புத்தூர்: தமிழ்நாட்டின் கோவை வழியாக கேரள மாநிலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அதில் மதுக்கரையில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை 12 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக செல்லும் ரயில் பாதையில் யானைகள் ரயிலில் மோதி உயிரிழப்பது வாடிக்கையாகிவிட்டது.
சில மாதங்களுக்கு முன்பு வாளையாறு அருகே ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழந்தன. அதன்பின் யானைகளின் நடமாட்டத்தை கண்டறிய வனத்துறை மற்றும் ரயில்வே துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தொடங்கின. இந்த நிலையில் கேரள மாநிலம் வாளையார் கஞ்சிக்கோடு இடையே கொட்டாம்பட்டி என்ற இடத்தில் நேற்று முன்தினம் (அக்-12) இரவு 17 யானைகள் சுற்றித்திரிந்துள்ளன.
இந்த யானை கூட்டம் நேற்று (அக்-13) அதிகாலை 3.40 மணியளவில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் நோக்கி சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை மற்றும் குட்டி யானை மீது மோதியது. இதனால் பெண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குட்டியானை படுகாயமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் வனத்துறையினரும் ரயில் ஓட்டுநர்கள் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து யானையின் உடலை மீட்டனர். அதோடு காயத்துடன் வனப்பகுதிக்குள் சென்ற குட்டி யானையை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:சத்தீஸ்கர் மாநிலத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்