வனத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் விலங்குகளில் முக்கியப் பங்கு வகிப்பது யானை. இந்த யானைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதியான கோழிக்கமுதி யானைகள் முகாமில் நேற்று மாலை யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
இதில் மதுக்கரையில் பிடிபட்ட சின்னத்தம்பி யானை உட்பட 26 பயிற்சி அளிக்கப்படும் யானைகளுக்காக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. யானை முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு யானைக்கு பிடித்தமான கரும்பு தேங்காய் உட்பட சத்துள்ள உணவுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு வழிபாடு நடத்தியபோது முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் ஒரே நேரத்தில் துதிக்கையை தூக்கி பிளறியது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து டாப்சிலிப் பகுதியில் மழை பெய்துவந்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் யானைகள் முகாமில் வனத் துறை அலுவலர்கள் கொண்டே யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட வனத் துறை அலுவலர்களும் வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு போன்ற உணவுகளை வழங்கி மகிழ்ந்தனர்.