கோவை மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கேரள மாநிலம் கோட்டத்துரையில் வசித்து வரும் முரளிதரன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செல்லான் இருவரும் மது போதையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
ஆனைகட்டி அருகே உள்ள கங்கா சேம்பர் அருகே செல்லும் போது, தண்ணீருக்காக வந்த யானைகள் கூட்டம் சாலையை கடக்கும் போது எதிர்பாராமல் இருசக்கர வாகனத்துடன் யானைகள் மீது மோதியுள்ளனர். அப்போது யானைகள் தாக்கியதில் முரளிதரன் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். படுகாயம் அடைந்த செல்லானை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
கேரள அரசாங்கம் அட்டப்பாடி பழங்குடியினர் பகுதியை பூரண மதுவிலக்கு பகுதியாக அறிவித்துள்ளதால் அங்குள்ளவர்கள் மது அருந்த மாங்கரைக்கு வருகையில் இவ்வாறு நடைபெறுகிறது எனவும், அட்டப்பாடியை போல அணைக்கட்டு மற்றும் சுற்று வட்டாரம் பகுதிகளை தமிழக அரசும் பூரண மதுவிலக்கு பகுதியாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.