கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த கொண்டனூர்புதூர் ஆதிவாசிகள் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (80). இன்று காலை தனது வீட்டிற்கு அருகே உள்ள வனப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் நின்றிருந்த ஒற்றை காட்டு யானை திடீரென பொன்னம்மாளை தாக்கி தூக்கி வீசியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, கொண்டனூர்புதூர் கிராம மக்கள் கோவை வனத்துறை அலுவலர்களுக்கும், சின்ன தடாகம் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வனத் துறையினர், காவல் துறையினர் பொன்னம்மாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனைகட்டி வனப்பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி ஏராளமான யானைகள் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகள் நீர் நிரப்ப வேண்டும் எனவும், யானைகள் வெளிவருவதை வனத் துறையினர் கண்காணிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.