கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுவருகிறது. இதனால் அப்பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் பல்வேறு சுகாதாரச் சீர் கேடுகள் விளைவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த வார்டுகளிலேயே மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரங்கள் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்துள்ள பாரதி பார்க் பகுதியில் மக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை மாநகராட்சி அமைத்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டு நிதியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை இன்று அந்நாட்டின் சுற்றுச்சூழல், எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிமனொட்டா சமருகா பார்வையிட்டு தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியின்போது அந்நாட்டு உயர் அலுவலர்கள், கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சாய்பாபா காலனி பகுதியில் உள்ள இரண்டாயிரத்து 500 வீடுகளில் நாளொன்றுக்கு சேகரிக்கப்படும் ஆயிரத்து 500 கிலோ மக்கும் குப்பைகள் இங்கு தரம்பிரிக்கப்பட்டு, இயந்திரங்கள் மூலம் மீத்தேன் வாயுவாக மாற்றப்படும். பின்னர் மீத்தேன் வாயுவை கொண்டு ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் தயாரிக்கப்பட்டு சாய்பாபா காலனி பகுதியில் உள்ள 250 தெருவோர மின்விளக்குகள் ஒளிரூட்டப்பட இருக்கின்றன.
ரூ. 45 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மூலம் 60 முதல் 90 கிலோ சமையல் எரிவாயு, 300 கிலோ இயற்கை உரம் உள்ளிட்டவற்றுடன் சுமார் 150 முதல் 170 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும். இவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரமே இந்த இயந்திரங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்பதால் கூடுதல் மின்சார தேவை இருக்காது என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 6 முதல் 8 மணி நேரம்வரை இந்த மின்சாரம் மூலமாக தெருவிளக்குகள் எரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: பாம்பை வைத்து நடனம்: 5 பேர் மீது வழக்கு!